» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நேபாள இடைக்கால பிரதமராக சுசிலா கார்க்கி பதவி ஏற்பு: 6 மாதத்தில் தேர்தல் நடத்த முடிவு
சனி 13, செப்டம்பர் 2025 10:39:31 AM (IST)

நேபாளத்தில் தொடர் வன்முறையின் காரணமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், புதிய இடைக்கால பிரதமராக சுசிலா கார்க்கி பதவி ஏற்றுக்கொண்டார்.
ஊழல் மற்றும் சமூக ஊடக தளங்கள் மீதான தடைக்கு எதிராக நேபாளம் முழுவதும் வெடித்த வன்முறையின் தொடர்ச்சியாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பிரதமர் சர்மா ஒலி தலைமையிலான ஆட்சியில் நடந்த ஊழல் மற்றும் சமூக ஊடகத்தடை ஆகியவற்றை கண்டித்து ெஜன் இசட் எனப்படும் மாணவர், இளைஞர்கள் பங்கேற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.
போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நாடாளுமன்றம் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார். ராணுவம் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் போராட்டம் ஓய்ந்துள்ளது. புதிய இடைக்கால பிரதமர் யார் என்பது குறித்து தொடர்ந்து ஜென் இசட் குழுவுக்கும், ராணுவத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை ஜனாதிபதி மாளிகையில் நடந்தது.
ஜனாதிபதி ராமச்சந்திர பவுடல் மற்றும் நேபாள ராணுவத் தலைவர் மற்றும் ஜென் இசட் குழுவினர் இதில் பங்கேற்றனர். அப்போது புதிய இடைக்கால பிரதமராக சுசிலா கார்க்கி, காத்மாண்டு மேயர் பாலேந்திர ஷா, நேபாள மின்சார ஆணையத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி குல்மான் கிசிங் மற்றும் தரண் ஹர்கா சம்பாங்கின் மேயர் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இருப்பினும், தற்காலிக பிரதமர் பதவிக்கு கார்க்கியின் பெயர் அனைத்து தரப்பினராலும் தற்காலிகமாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
இருப்பினும் நாடாளுமன்றத்தை கலைப்பதா, வேண்டாமா என்பதில் இழுபறி ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் ஜனாதிபதி ராமச்சந்திர பவுடலுக்கும், ஜென் இசட் பிரதிநிதிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தை கலைக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை ஜனாதிபதி பவுடல் எடுத்தார். நாடாளுமன்றத்தை கலைத்தால் மேலும் அரசியலமைப்பு நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், 2015 இல் வெளியிடப்பட்ட நேபாள அரசியலமைப்பை தொடர்ச்சியாக பின்பற்ற அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். ஆனால் ெஜன் இசட் குழுவினர் நாடாளுமன்றத்தை கலைக்கும் அறிவிப்பை வெளியிடுவதில் உறுதியாக இருந்தனர். இதை ஏற்க மறுத்த ஜனாதிபதி பவுடலும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் பிரச்னை உருவானது. இறுதியில் ஜென் இசட் குழுவின் கோரிக்கைகளை ஜனாதிபதி பவுடல் ஏற்றுக்கொண்டார்.
இதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைக்கவும், இடைக்கால பிரதமராக சுசிலா கார்க்கியை நியமிக்கவும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசிலா கார்க்கி நேற்று இரவு 9மணிக்கு பதவியேற்றார். அவருடன் ஜென் இசட் குழுவை சேர்ந்தவர்கள் இடைக்கால அமைச்சராக பதவி ஏற்றனர். இதனால் நேபாளத்தில் நிலவி வந்த அரசியலமைப்பு முட்டுக்கட்டை தீர்ந்தது. பின்னர் நேபாள நாடாளுமன்றத்துக்கு 6 மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று இடைக்கால பிரதமர் சுசிலா கார்க்கி அறிவித்தார்.
* யார் இந்த சுசிலா கார்க்கி?
* 1952 ஜூன் 7 அன்று இந்திய எல்லைக்கு அருகில் உள்ள கிழக்கு நேபாளத்தின் பிரத்நகரில் உள்ள சங்கர்பூர்-3ல் சுசிலா கார்க்கி பிறந்தார்.
* 1971ல் நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தின் மகேந்திர மோராங் வளாகத்தில் இளங்கலைப் பட்டத்தையும், 1975ல் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டத்தையும் முடித்தார்.
* 1978 இல் சட்டப் பட்டம் பெறுவதற்காக அவர் திரிபுவன் பல்கலைக்கழகத்திற்கு சென்றார்.
* நீதித்துறைத் துறையில் 32 ஆண்டுகள் கார்க்கி செலவிட்டார்
* 1979ல் பிரத்நகரில் தனது சட்டப் பயிற்சியைத் தொடங்கினார்
* 1985 ஆம் ஆண்டு தரனில் உள்ள மகேந்திரா மல்டிபிள் கேம்பஸில் உதவி ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.
* 2007 ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞரான இவர், 2009 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
* 2010 நவம்பர் 18 அன்று நிரந்தர நீதிபதியானார்.
* 2016 ஜூலையில் நேபாளத்தின் 24வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ஓட்டல் துறை வீழ்ச்சி: நேபாளம் சுற்றுலா சார்ந்த நாடு. அங்கு நடந்த வன்முறையில் பல ஓட்டல்கள் எரிக்கப்பட்டன. காத்மாண்டு பள்ளத்தாக்கு, போகாரா, புட்வால், பைரஹாவா, ஜாபா, பிரத்நகர், தங்கதி, மஹோட்டாரி மற்றும் டாங்-துளசிபூர் ஆகிய இடங்களில் உள்ள முன்னணி ஓட்டல்கள் எரிக்கப்பட்டன. இதனால் 2,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள். மேலும் பலகோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய பெண் உள்பட 51 பேர் பலி: நேபாளத்தில் வெடித்த வன்முறைக்கு ஒரு இந்தியர் உள்பட 51 பேர் பலியாகி உள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர். நேபாள வன்முறையில் பலியான இந்திய பெண் பெயர் ராஜேஷ்தேவி கோலா என்பது தெரிய வந்தள்ளது. நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் கோயிலுக்கு கணவர் ராம்வீர் சிங் சயானியுடன் சென்றுள்ளார். செப்.9 அன்று வன்முறை ஏற்பட்ட போது காத்மாண்டுவில் அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் தீ வைக்கப்பட்டது. அதில் இருந்து தப்பிக்க 4வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக இறங்கிய போது அவர் பலியானது தெரிய வந்தது. நேபாளத்தில் இருந்து அவரது உடல் உபி கொண்டு வரப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)

ரஷியாவில் ரிக்டர் 7.4 அளவில் பயங்கர நிலநடுக்கம்
சனி 13, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு
சனி 13, செப்டம்பர் 2025 10:34:56 AM (IST)

சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவல் அளித்தால் ஒரு லட்சம் டாலர் சன்மானம்!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 12:37:14 PM (IST)

சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்றவரை அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் : டிரம்ப் ஆவேசம்!!
வியாழன் 11, செப்டம்பர் 2025 12:38:45 PM (IST)

நேபாளத்தில் தொடரும் வன்முறை: வணிக வளாகங்களை கொள்ளையடிக்கும் பொதுமக்கள்!
புதன் 10, செப்டம்பர் 2025 5:25:44 PM (IST)
