» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெலிகிராம் தடைக்கு எதிரான மனு தள்ளுபடி: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வெள்ளி 19, ஜூன் 2026 12:17:49 PM (IST)



நீட் மறுதேர்வை முறையாக நடத்தும் நோக்கில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தற்காலிகத் தடையை எதிர்த்து, அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவைத் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், டெலிகிராம் செயலி தவறான வழிகளில் பயன்படுத்தப்பட்டதாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்குப் பல புகார்கள் வந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்கு இணங்க, ஜூன் 21-ல் நடக்கவுள்ள நீட் மறுதேர்வின்போது வினாத்தாள் கசிவைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜூன் 22-ஆம் தேதி வரை டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் விதிக்கப்பட்ட இந்தத் தற்காலிகத் தடையை எதிர்த்துத் டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது மத்திய அரசு நேற்று நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், "டெலிகிராம் செயலியில் உள்ள எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அதன் தனியுரிமைக் கொள்கைகளால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களைப் பாதுகாப்பு முகமைகளால் எளிதில் கண்டறிய முடிவதில்லை. இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது" என்று மத்திய அரசு குறிப்பிடிருந்தது.

இந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தேஜஸ் காரியா தலைமையிலான விடுமுறைக்கால அமர்வு (Vacation Bench) இந்த மனுவை இன்று முழுமையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், மத்திய அரசின் இந்த முடக்கம் என்பது தேர்வுக்காக விதிக்கப்பட்ட மிகக் குறைந்த கட்டுப்பாடுகளைக் கொண்டது என்றும், டெலிகிராம் வழியாகத் தொடர்ந்து நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, மத்திய அரசின் இந்தத் தற்காலிகத் தடையால் இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான டெலிகிராம் பயனாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று டெலிகிராம் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மாணவர்களின் நலன் மற்றும் தேர்வுப் பாதுகாப்பைக் கருதி நீதிமன்றம் இந்தத் தடையை நீக்க மறுத்துவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory