» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

செய்தித்தாள்களில் உணவுகளை மடித்து வழங்கினால் அதிரடி நடவடிக்கை! – FSSAI எச்சரிக்கை!

திங்கள் 8, ஜூன் 2026 5:11:07 PM (IST)

மக்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் நோக்கில், உணவகங்கள் மற்றும் சாலையோரக் கடைகளில் வடை, சமோசா, போண்டா உள்ளிட்ட உணவுப் பண்டங்களைச் செய்தித்தாள்களில் பொட்டலமாகக் கட்டி வழங்குவதற்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI) கடுமையான தடை விதித்து மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்களின் ஆரோக்கியமான நல்வாழ்வை உறுதி செய்யும் பொருட்டு, 'உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகள் 2018' சட்டத்தின்கீழ் செய்தித்தாள்களில் உணவுப் பண்டங்களை மடித்து விற்பனை செய்வது ஏற்கனவே சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு உணவகங்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட உணவு விற்பனையாளர்கள் பலர் இன்னமும் பழைய செய்தித்தாள்களையே உணவுகளை மடித்துக் கொடுக்கப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த விதிமுறை மீறலுக்கு எதிராகப் கள ஆய்வுகள் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் தொடரப்பட்டு வரும் நிலையில், இச்செயல் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் தற்போது அனைத்து மாநில உணவுப் பாதுகாப்புப் பிரிவுகளுக்கும், விற்பனையாளர்களுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மை உருகுவதால் ஏற்படும் தீவிர உடல்நலக் கேடு:

செய்தித்தாள்களில் உணவுகளை மடிப்பதன் மூலம் ஏற்படும் பேராபத்து குறித்து எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI) வெளியிட்டுள்ள மருத்துவ எச்சரிக்கை விபரம் வருமாறு: "செய்தித்தாள்களில் அச்சிடப் பயன்படுத்தப்படும் கறுப்பு மையில் உடலுக்குத் தீங்கினை விளைவிக்கக்கூடிய பல்வேறு ஆபத்தான ரசாயனங்கள், சாயங்கள் மற்றும் ஈயம் (Lead) போன்ற நச்சுப் பொருட்கள் கலந்துள்ளன. கடைகளில் சூடான வடை, போண்டா, சமோசா போன்ற பலகாரங்களைச் செய்தித்தாளின் மீது வைக்கும்போது, அந்த வெப்பத்தின் காரணமாகத் தாளிலுள்ள மை மிக எளிதாக உருகி, உணவோடு நேரடியாகக் கலந்துவிடுகிறது.

இந்த மைக் கலந்த உணவை மக்கள் உட்கொள்ளும்போது, அது உடலில் நச்சாக மாறி, நாளடைவில் தீவிரமான பல்வேறு உடல்நலப் பாதிப்புகளையும், உள்உறுப்புக் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது. எனவே, பொதுமக்கள் இந்த விவகாரத்தில் மிகவும் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்." என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

புகார் அளிக்க அழைப்பு மற்றும் கடும் எச்சரிக்கை:

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து உணவு விற்பனையாளர்களும், உணவக உரிமையாளர்களும் பழைய செய்தித்தாள்களில் உணவுப் பண்டங்களை மடித்துக் கொடுப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதை உணர்ந்து, இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இனிவரும் நாள்களில் இந்தச் சட்டத்தை மதிக்காமல் தொடர்ந்து செய்தித்தாள்களில் உணவுகளை மடித்து வழங்கும் கடைகள் மற்றும் நபர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்பு ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும், தங்களின் பகுதிகளில் எந்தவொரு கடையிலாவது செய்தித்தாள்களில் உணவைப் பொட்டலமாக மடித்துக் கொடுப்பது குறித்துப் பொதுமக்கள் அறிந்தால், அது குறித்து உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு முறையான புகார் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory