» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெங்களூருவில் அதிர்ச்சிச் சம்பவம்: முதியவரை கூரியரில் அனுப்ப முயன்ற குடும்பம்!

புதன் 18, மார்ச் 2026 5:52:45 PM (IST)



உகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆம்னி பஸ் கட்டணம் கிடுகிடுவென உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, பெங்களூருவில் ஒரு குடும்பத்தினர் தங்களது வீட்டு முதியவரைச் சாக்குப்பையில் மூட்டையாகக் கட்டி கூரியர் மூலம் அனுப்ப முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகத்தில் வியாழக்கிழமை உகாதி பண்டிகையும், சனிக்கிழமை  ரம்ஜான் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்துத் தொடர்ச்சியாக 4 நாட்கள் அரசு விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் பெங்களூருவில் பணியாற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர்.

இதனைப் பயன்படுத்திக்கொண்ட ஆம்னி பஸ் உரிமையாளர்கள், கட்டணத்தை 2 முதல் 3 மடங்கு வரை உயர்த்தினர். இந்த அதீத கட்டண உயர்வால் ஆத்திரமடைந்த ஒரு குடும்பத்தினர், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஒரு விபரீதமான மற்றும் நூதன முறையைக் கையாண்டனர்.

தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவரைச் சாக்குப்பையில் வைத்து மூட்டையாகக் கட்டி, பெங்களூரு வயாலிகாவலில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றனர். அந்தப் பார்சலை ஊருக்கு அனுப்பி வைக்குமாறு அவர்கள் கூறியபோது, சந்தேகமடைந்த ஊழியர்கள் பார்சலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே ஒரு மனிதர் இருப்பதை அறிந்து உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், "பண்டிகை காலங்களில் பஸ் கட்டணம் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால், எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவே இந்த முறையைப் பின்பற்றினோம்" என அக்குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதற்கிடையில், சாக்குப்பைக்குள் இருந்த முதியவருக்குச் சுவாசக் கோளாறு ஏற்பட்டு மூச்சுத்திணறல் உண்டானது. தனது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் இச்செயலுக்காக அக்குடும்பத்தினர் போலீசாரிடமும், பொதுமக்களிடமும் மன்னிப்பு கோரினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "சாக்குப்பையில் ஒரு நபரை வைத்து மூட்டையாகக் கட்டி கொண்டு வந்தது மிகவும் தவறான செயல். இது அந்த நபரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும். இது ஒரு கடுமையான குற்றச்செயலாகும். இருப்பினும், குடும்பத்தினர் மன்னிப்பு கோரியதால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து அனுப்பியுள்ளோம்" எனத் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory