» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மேற்கு வங்கத்தில் ஜனாதிபதிக்கு அவமரியாதை : பிரதமர் மோடி கண்டனம்; மம்தா விளக்கம்
ஞாயிறு 8, மார்ச் 2026 8:31:09 PM (IST)

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதிக்கு மம்தா அரசு அவமரியாதை செய்துள்ளது வெட்கக்கேடானது என பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சர்வதேச சந்தல் மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவை, மாநில அரசு முறையாக வரவேற்கவில்லை என்ற குற்றச்சாட்டு பெரும் அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, "நிகழ்ச்சி குறித்த விவரங்கள் மாநில அரசுக்குத் தெரியாது" என விளக்கம் அளித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் கொசாய்பூரில் நடைபெற்ற பழங்குடியினர் தொடர்பான சர்வதேச சந்தல் மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "மத்திய அரசின் திட்டங்கள் இந்தப் பகுதி மக்களைச் சென்றடைந்ததா எனத் தெரியவில்லை. பழங்குடியினர் ஒற்றுமையாக இருப்பதைச் சிலர் விரும்பவில்லை எனத் தோன்றுகிறது. மாநாட்டிற்கு வருபவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மம்தா பானர்ஜி எனது தங்கை போன்றவர்; அவர் ஏன் மனவருத்தத்தில் இருக்கிறார் எனத் தெரியவில்லை" என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
முன்னதாக, ஜனாதிபதியை வரவேற்க முதல்வர் மம்தா பானர்ஜியோ அல்லது மாநில அமைச்சர்களோ நேரில் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், மாநாடு நடைபெறவிருந்த இடம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதால் பார்வையாளர்கள் வருகை குறைவாக இருந்ததாகவும் புகார்கள் எழுந்தன.
ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட கழிவறையில் தண்ணீர் இல்லை என்றும், விழா நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் குப்பைகள் குவிந்து கிடந்ததாகவும் பாஜக தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனைச் சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, "ஜனாதிபதிக்கு இழைக்கப்பட்ட இந்த அவமரியாதை வெட்கக்கேடானது மற்றும் முன்னெப்போதும் இல்லாதது" எனத் திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாகச் சாடினார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த முதல்வர் மம்தா பானர்ஜி, "ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரல் குறித்து மாநில அரசுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. விழா நடைபெற்ற இடம் மாநில அரசால் தேர்வு செய்யப்பட்டதல்ல; அது இந்திய விமான நிலைய ஆணையத்திற்குச் சொந்தமானது. அங்குள்ள குறைபாடுகளுக்குத் தனியார் ஏற்பாட்டாளர்களே பொறுப்பு. ஜனாதிபதி மீதும், அரசியலமைப்பின் மீதும் நாங்கள் மிகுந்த மதிப்புக் கொண்டுள்ளோம். எங்கள் மீது வீண் பழி சுமத்த வேண்டாம்" என்றார்.
தொடர்ந்து 3-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜி மேலும் பேசுகையில், "பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் பழங்குடியினருக்கு எதிராக வன்முறை நடந்தபோது நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை? பாஜக-வின் அறிவுரையை ஏற்றுத் தேர்தல் நேரத்தில் அரசியல் விளையாட்டை ஆட வேண்டாம்" என ஜனாதிபதிக்கு மறைமுகமாகப் பதிலளித்தார்.
தேர்தல் நெருங்கும் வேளையில், ஜனாதிபதி மற்றும் மாநில அரசுக்கு இடையிலான இந்த மோதல் மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடியரசுத் தலைவருக்கு அவமதிப்பு: மேற்கு வங்க அரசு அறிக்கை அளிக்க மத்திய உள்துறை செயலர் உத்தரவு
திங்கள் 9, மார்ச் 2026 12:46:02 PM (IST)

டிசம்பருக்குள் ஹைதராபாத் டீசல் பேருந்துகள் இல்லாத நகரமாகும்: முதல்வர் ரேவந்த் ரெட்டி
திங்கள் 9, மார்ச் 2026 10:54:47 AM (IST)

டெல்லியில் ரூ.33,500 கோடி மதிப்பிலான திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
திங்கள் 9, மார்ச் 2026 10:45:17 AM (IST)

டி20 உலகக் கோப்பை 3-வது முறையாக சாம்பியன்: வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 9, மார்ச் 2026 8:29:49 AM (IST)

ஈரான் கப்பல் மூழ்கடிப்பு: மனிதாபிமான அடிப்படையில் உதவினோம் - அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
சனி 7, மார்ச் 2026 4:14:06 PM (IST)

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு: கட்டுப்பாடு மீண்டும் அமல்
சனி 7, மார்ச் 2026 11:21:45 AM (IST)

