» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு

செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

டேராடூனில் இன்று காலை ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்கப்பட்டனர். 

உத்தராகண்ட் மாநிலம், டேராடூனில் இன்று காலை மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. டேராடூனின் பவுண்டா எனும் பகுதியில் உள்ள தேவபூமி கல்வி நிறுவனத்தில் பயிலும் 200 மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர், மாணவர்களை பத்திரமாக மீட்டனர். தொடர் கனமழை காரணமாக இப்பகுதியில் பல்வேறு சாலைகள், வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் கடும் சேதமடைந்தன.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் தொலைபேசியில் பேசினார். மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்த பிரதமர், சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உறுதி அளித்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் புஷ்கர் சிங் தாமியை தொடர்பு கொண்டு பேசியதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "கனமழை காரணமாக வீடுகள், அரசு கட்டிடங்கள் என ஏராளமான சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இன்று காலை என்னிடம் தொலைபேசியில் பேசி விவரங்களை கேட்டறிந்தனர். இந்த நெருக்கடியான நேரத்தில் மத்திய அரசு உத்தராகண்ட்டுக்கு உறுதியாக துணை நிற்கிறது என்பதை வலியுறுத்தினர். அனைத்து உதவிகளும வழங்கப்படும் என உறுதி அளித்தனர்" என தெரிவித்துள்ளார்.

டேராடூனில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரில் பார்வையிட்டார். சஹஸ்த்ரதாரா, ராய்ப்பூர் உள்ளிட்ட டேராடூனில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஆய்வு செய்தார். இன்று காலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக ரிஷிகேஷ் மாவட்டத்தில் உள்ள சந்திரபாகா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மூன்று பேரை மாநில பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory