» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

திங்கள் 23, டிசம்பர் 2024 4:55:49 PM (IST)

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைகளைத் தனது தலைமையிலான அரசாங்கம் வழங்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அரசுப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று (டிச.23) வழங்கினார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, பிரதமர் மோடி பணி நியமன உத்தரவுகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், இன்று 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, காணொலி காட்சி வாயிலாக பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.

ரோஜ்கர் மோளாவில் பங்கேற்ற பிரதமர் மோடி கூறியது: "நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல, இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பது அவசியம். இதற்கான பொறுப்பு நாட்டின் கல்வித் துறையிடம் உள்ளது. புதிய இந்தியாவைக் கட்டியெழுப்ப ஒரு நவீன கல்வி முறை இங்கு அவசியம். அதனை நாடு தற்போது உணர்ந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் மூலம், நாடு இப்போது அந்த திசையில் நகர்ந்துள்ளது. முன்னதாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் காரணமாக, கல்வி முறை பெரும்பாலும் மாணவர்களுக்கு சுமையாகவே மாறியிருந்தது. ஆனால் இப்போது அவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைகளை தனது தலைமையிலான அரசாங்கம் வழங்கியுள்ளது. மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஆள்சேர்ப்பு செயல்முறை நடத்தப்படுகிறது. முன்னதாக, கிராமப்புற, தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு மொழி பெரும் தடையாக இருந்தது.

ஆனால் இப்போது, தாய் மொழியில் பாடங்களை கற்பிக்கவும், தேர்வுகளை நடத்தவும் கொள்கைகளை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். மேலும், 13 மொழிகளில் தேர்வுகளை எழுதுவதற்கான வாய்ப்பையும் வழங்கியுள்ளோம். கிட்டத்தட்ட, 50,000 இளைஞர்கள் மத்திய ஆயுதப்படையில் சேர்வதற்கான பணி நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர். அரசாங்கத்தின் கொள்கைகள் தற்போது கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.

பெரும்பாலான இளைஞர்களுக்கு விவசாயத் துறையில் வேலை கிடைத்துள்ளது. அவர்கள் விரும்பிய பணிகளையும் மேற்கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது. இன்று ஆயிரக்கணக்கான பெண்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது. உங்கள் வெற்றி மற்ற பெண்களுக்கு ஊக்கமளிக்கும். பெண்களை எல்லாத் துறைகளிலும் தன்னிறைவு பெறச் செய்வதே எங்கள் முயற்சி. பெண்களைத் தடுக்கும் ஒவ்வொரு தடையையும் அகற்ற எங்கள் அரசாங்கம் உழைத்து வருகிறது.

பெண்களுக்கு 26 வார மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான அரசின் முடிவு. அவர்களின் தொழில் வாழ்க்கைக்குப் பெரிதும் உதவியுள்ளது. எங்கள் அரசாங்கம் 30 கோடி பெண்களுக்கு ஜன்தன் வங்கி கணக்குகளைத் திறக்க வழிவகை செய்துள்ளது. இது, அவர்கள் அரசாங்கத் திட்டங்களிலிருந்து நேரடியாகப் பயனடைவதை உறுதி செய்துள்ளது” என்றார்.


மக்கள் கருத்து

SRINIVASANDec 26, 2024 - 01:19:27 PM | Posted IP 162.1*****

TAMILNADU MULUVATHUM VADA INDIARGAL VELAI VAAIPPU ATHIGARITHULLATHU

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory