» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஒலியை விட பல மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி: ராஜ்நாத்சிங் பாராட்டு!
திங்கள் 18, நவம்பர் 2024 8:47:29 AM (IST)
ஒலியை விட பல மடங்கு வேகமாக செல்லும் நீண்ட தூர ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்து உள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தான், சீனா போன்ற அண்டை நாடுகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வரும் இந்தியா, தனது படை வலிமையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக டிரோன்கள், ஒலியை விட வேகமாக செல்லும் சூப்பர்சானிக், ஹைப்பர்சானிக் ஏவுகணைகள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தளவாடங்கள் என அடுத்த தலைமுறை ஆயுதங்களை தயாரித்து வருகிறது.
அந்தவகையில் ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் நீண்ட தூர ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) தயாரித்து வருகிறது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணையில் ஒன்றை டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் நேற்று சோதித்தனர். ஒடிசாவில் நடந்த இந்த சோதனை வெற்றிகரமாக நடந்தது.
டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்பு படையினரின் அதிகாரிகள் முன்னிலையில் இந்த சோதனை நடந்தது. ஏவுகணை சோதனையை பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த ரேடார் உள்ளிட்ட கண்காணிப்பு அமைப்புகள் மூலம் பாதுகாப்பு விஞ்ஞானிகள் கண்காணித்தனர். இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ததாக அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.
ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் பல்வேறு வகையான வெடிபொருட்களுடன் 1,500 கி.மீ. தொலைவுக்கு அப்பல் சென்று தாக்கும் திறன் பெற்றவை ஆகும். ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதன் மூலம் இந்த ஏவுகணைகளை கொண்ட குறிப்பிட்ட சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து இருக்கிறது.
தற்போதைய நிலையில் ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரிப்பதில் ரஷியா, சீனா நாடுகள் முன்னணியில் உள்ளன. அதேநேரம் அமெரிக்கா ஒரு லட்சிய திட்டத்தின் கீழ் இதுபோன்ற ஆயுதங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதைத்தவிர பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஈரான் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் இந்த ஏவுகணை திட்டங்களை தொடர்கின்றன.
ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததற்காக டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகளை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: ஒடிசா கடற்பகுதியில் உள்ள அப்துல்கலாம் தீவில் நீண்ட தூர ஹைப்பர்சானிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து இந்தியா மிகப்பெரிய மைல்கல் சாதனையை படைத்து இருக்கிறது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம்.
இந்த சாதனை மூலம் இத்தகைய முக்கியமான மற்றும் மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பங்களைக் கொண்ட குறிப்பிட்ட சில நாடுகளின் குழுவில் நம் நாடும் இணைந்துள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.