கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தலைமையில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்ட மீனவப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் மனுக்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன:
கோடிமுனை, கீழக்கடியப்பட்டணம் மீன்பிடி இறங்குதளச் சாலைகள் மற்றும் கடியப்பட்டணம் அன்னை தெரசா தெரு சிமெண்ட் சாலையைச் சீரமைத்தல்; மேலக்குறும்பனை இறங்குதளத்தில் கோபுர விளக்கு அமைத்தல். கடியப்பட்டணம் கிராமத்திற்குக் குடிநீர் வசதி, குழித்துறை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பழைய குழாய்களை மாற்றுதல், புறம்போக்கு நில வீடுகள் மற்றும் மேல்மிடாலம் RO பிளாண்டிற்கு மின் இணைப்பு வழங்குதல்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைத்தல்; நாகர்கோவில் - மதுரை தடத்தில் நள்ளிரவு பேருந்துகள் மற்றும் கடலோரக் கிராமங்களுக்குக் கால அட்டவணைப்படி பேருந்துகளை இயக்குதல்.
தேங்காய்ப்பட்டணம் துறைமுகத்தில் போலி எண்களுடன் மீன் விற்பனை செய்யும் பிற மாநில விசைப்படகுகளைத் தடுத்தல், தட்டுமடி தொழிலைத் தடை செய்தல், மேல்மிடாலத்தில் செயற்கைப் பவளப்பாறை அமைத்தல், சாகர் மித்ரா பணியாளர்களை மீள நியமித்தல் மற்றும் மானிய மண்ணெண்ணெய் - நலவாரிய அட்டைகள் வழங்குதல்.
கோரிக்கை மனுக்களைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் திரு. மு. பிரதாப், துறை சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து அவற்றுக்கான பதில்களையும் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளையும் விவரித்தார்
கன்னியாகுமரியில் உள்நாட்டு மீன்வளப் பணிகளுக்காகத் தனி உதவி இயக்குநர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வுக்குப் பின் தகுதியான வீடுகள் மற்றும் RO பிளாண்டிற்கு மின் இணைப்பு வழங்கப்படும்.
கோவளம் கழிவுநீர் ஓடையைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது; ஓடையில் கழிவுகளைக் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கவும், மேல்மிடாலத்தில் செயற்கைப் பவளப்பாறை அமைக்கவும் அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேங்காய்ப்பட்டணம் துறைமுகத்தில் விதிமீறும் வெளிமாநிலப் படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நலவாரிய அட்டைகள் வழங்கச் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்பதோடு, புதிய குடிநீர்க் குழாய்கள் பதித்தல், சாலைகள் சீரமைத்தல் மற்றும் கடலோரப் பேருந்து சேவைகளை முறைப்படுத்துதல் ஆகிய பணிகள் முன்னெடுக்கப்படும்" என ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டி. சாய் சரண் ரெட்டி, ஐ.எஃப்.எஸ்., நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் வேல்முருகன், மீன்வளத்துறை துணை இயக்குநர் கோபிநாத், மீன்பிடி துறைமுக திட்ட கோட்டச் செயற்பொறியாளர், உதவி இயக்குநர்கள், பிற துறை அரசு அலுவலர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

