திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசுச் செயலருமான சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அரசுச் செயலர் சந்தீப் நந்தூரி பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மிக அதிகமாகப் பாதிக்கப்படக்கூடிய 7 இடங்களும், அதிகமாகப் பாதிக்கப்படக்கூடிய 24 இடங்களும் என மொத்தம் 31 பகுதிகள் கண்டறியப்பட்டுத் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
மீட்புப் பணிகளுக்காக 5,466 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். மக்களைப் பாதுகாப்பாகத் தங்க வைக்க 7 நிவாரண மையங்கள், மேலும் தேவைக்கேற்பப் பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களை நிவாரண முகாம்களாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மையங்களில் குடிநீர், உணவு, மின்சாரம் மற்றும் மருத்துவ வசதிகள் தடையின்றி கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
தீயணைப்புத்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மீட்பு உபகரணங்களைப் போதிய அளவில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைக்காலத் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மேலும், பயிர்ச் சேதங்களைத் தவிர்க்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நிவாரணம் வழங்க வேளாண் துறையினர் நடவடிக்கைகளை ஆயத்தப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, திருநெல்வேலி நகரம், கல்லணை தெரு, காட்சி மண்டபம் அருகிலுள்ள திருநெல்வேலி கால்வாய் பகுதி, நெடுங்குளம், கண்டியப்பேரி மற்றும் குறிச்சிகுளம் ஆகிய பகுதிகளுக்கு அரசுச் செயலர் திரு. சந்தீப் நந்தூரி மற்றும் ஆட்சியர் திரு. ஆனந்த் மோகன் ஆகியோர் நேரில் சென்று முன்னெச்சரிக்கை மற்றும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் ச. வித்யா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ் குப்தா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் பிரியா உட்படப் பல துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

