தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவரை ஜாமீனில் எடுக்க முடியாத மனவேதனையில் 19 வயது இளம்பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தாளமுத்து நகர் சங்குகுளி காலனி, லூர்தம்மாள்புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் என்ற கருப்பு (22). இவரது மனைவி திவ்யா (19). இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து, கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதியினருக்கு 7 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இதற்கிடையில், முத்துக்குமார் என்ற கருப்பு தாளமுத்து நகரில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, கடந்த 7 மாதங்களாகச் சிறையில் இருந்து வருகிறார். சிறையில் உள்ள கணவரை ஜாமீனில் வெளியே கொண்டு வர திவ்யா பலமுறை முயற்சி செய்தும், அவரை ஜாமீனில் எடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் திவ்யா கடும் மனவேதனையில் இருந்து வந்தார்.

இந்நிலையில், தனது மாமியார் நாகம்மாள் வீட்டில் இருந்த திவ்யா, இன்று தனது 7 மாத ஆண் குழந்தையை வீட்டு வாசலில் வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்று கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டார். பின்னர் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தீ மளமளவெனப் பரவி உடல் முழுவதும் எரிந்ததில் திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்துத் தகவல் அறிந்த தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் குமாரவேல் பாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, திவ்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திவ்யாவுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால், தூத்துக்குடி நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் சுனில் மற்றும் தூத்துக்குடி சார் ஆட்சியர் ஆகியோர் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.