தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் 75-வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு ஆண்டு முழுவதும் பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கல்லூரியின் விலங்கியல் துறை சார்பில் முதன்முறையாக “LIVORA 2026 – இயற்கை மற்றும் வனவிலங்குகளைக் கொண்டாடி அறியும் கண்காட்சி” அக்டோபர் 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 4 நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இக் கண்காட்சியின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரிச் செயலர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். வ.உ.சி. கல்லூரிச் செயலர் ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் நாடாவை வெட்டி கண்காட்சியை முறைப்படி தொடக்கி வைத்துப் பார்வையிட்டார்.

இயற்கை மற்றும் வனவிலங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இக் கண்காட்சியை, இறுதி நாளான வரும் அக்டோபர் 10-ம் தேதி (சனிக்கிழமை) பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் முழு நேரமும் நேரில் வந்து பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக் கண்காட்சியில் கல்லூரி பேராசிரியர்கள், விலங்கியல் துறை மாணவர்கள் மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.

