தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் உள்ள 60 வார்டுகளில் 1,74,800 கட்டிடங்களுக்கு சொத்துவரி செலுத்தப்படுகிறது. சொத்துவரியின் மூலம் மட்டும் மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.87.30 கோடி வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய் மாநகராட்சி வளர்ச்சித் திட்டப்பணிக்கு செலவிடப்படுகிறது.
இந்நிலையில் 2026-27 நிதி ஆண்டுக்கான சொத்து வரி வசூல் ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்கி தற்போது வரை 2025-26 II ஆம் அரையாண்டு வரையிலான நிலுவைத் தொகை ரூ.4.52 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நடப்பு 2026-27 ஆம் ஆண்டில் ரூ.26.48 கோடி ஆக மொத்தம் ரூ.31 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டல பகுதிகளில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகள் மூலம் ரூ.2.97 கோடி குத்தகைத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மேற்படி வரியினங்களை முழுமையாக செலுத்தும்பட்சத்தில் தான் மாநகராட்சியின் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம், சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை தடையின்றி மக்களுக்கு செய்து கொடுக்க இயலும்.
எனவே பொதுமக்கள் 2026-27 இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரியை இம்மாதம் 31ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகை (அதிகபட்சம் ரூ.5000/-) பெற்றுக்கொள்ளவும், அபராதம் மற்றும் சட்டபூர்வ நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் வணிக நிறுவனங்கள் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்த ஏதுவாக தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 14 வரி வசூல் மையங்களிலும் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை செயல்படும். இதனை பயன்படுத்தி பொதுமக்கள் வரியினங்களை நிலுவையின்றி செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

