தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் நகர்ப்புற பசுமையாக்கம் திட்டத்தின் கீழ் மரங்களின் பசுமைப் பரப்பை அதிகரித்தல், சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் நகரின் அழகிய தோற்றத்தை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய சாலைகளின் மையத்தடுப்பான்கள், பிரதான சாலைகளின் சந்திப்புகளில் உள்ள தீவுகள் மற்றும் பூங்காக்களில் அழகுச்செடிகள் நடப்பட்டு, மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. சாலைகளில் உள்ள ரவுண்டானாக்கள் தற்போது ஜொலிக்கும் வகையில் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.
மாநகராட்சியில் ஆசிரியர் தின விழாவை கொண்டாடும் வகையில் ஆசிரியர்களை கௌரவிக்கும் நோக்கில் 'குரு வனம்' நிகழ்வு மூலம் 10000 மரக்கன்றுகள் பள்ளி, கல்லூரி, வனத்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பல்வேறு இடங்களில் மாவட்ட வனத்துறை சார்பிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. முத்துநகர் கடற்கரை பகுதி மற்றும் ரோச் பூங்கா, பனிமய மாதா தேவாலய பகுதிகளிலும் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தற்போது தருவைக்குளம் பகுதியில் 5,000 மரக்கன்றுகள் நடப்பட்டு அப்பகுதி சோலை வனமாக திகழ்கிறது.
மாநகராட்சியின் மூலம் எட்டயபுரம் சாலை, புதிய பேருந்து நிலையம், பாலை ரோடு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகம், முத்துநகர் கடற்கரை பகுதி மற்றும் ரோச் பூங்கா சுற்றுச்சுவர்களில் தூத்துக்குடி மாநகரின் பெருமையை பறைசாற்றும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இப்பணிகள் மூலம் தூத்துக்குடி மாநகரம் பசுமை நகரமாகவும், தூய்மை நகரமாகவும், அழகு நகரமாகவும் மாறி வருகிறது. நடப்பட்ட மரக்கன்றுகளை பாதுகாப்பதும், பராமரிப்பதும் பொதுமக்களின் கடமையாகும். பசுமையான தூத்துக்குடியை உருவாக்கிட அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

