தூத்துக்குடி அருகே மேய்ச்சலுக்குச் சென்ற 37 ஆடுகள் ஒரே நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தன. தேங்கி நின்ற மழைநீரில் ரசாயன விஷக்கழிவு கலந்திருந்த நிலையில், அதனைப் பருகியதால் ஆடுகளுக்கு உயிரிழப்பு ஏற்பட்டதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தூத்துக்குடி அருகே உள்ள மீளவிட்டானைச் சேர்ந்தவர் சுடலை. கால்நடை விவசாயியான இவர் சுமார் 300 ஆடுகளை வளர்த்து வருகிறார். காலாங்கரை பகுதியில் உள்ள விளைநிலத்தில் உரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த ஆட்டுக்கிடையில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்துப் பராமரித்து வந்தார்.

நேற்று காலை தூத்துக்குடி அருகேயுள்ள வீராநாயகன்நட்டுப் பகுதியில் சுமார் 70 ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். நேற்று மாலை மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகளைக் காணாததால், அப்பகுதி மக்களின் உதவியுடன் தேடியபோது காட்டுப்பகுதிக்குள் ஆங்காங்கே 37 ஆடுகள் இறந்துகிடப்பது தெரியவந்தது. மேலும் ஒருசில ஆடுகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன.

இதனிடையே வீராநாயகன்நட்டு பகுதியில் உள்ள குடோன் அருகே, நேற்று அதிகாலை பெய்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் தேங்கியிருந்தது. அதில் ரசாயன விஷக்கழிவுகள் கலந்திருந்த நிலையில், அதை மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் குடித்த காரணத்தால் தான் உயிரிழப்பு நேரிட்டதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒரே நேரத்தில் 37 ஆடுகள் வரை இறந்துள்ளதால் தனது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் வேதனை தெரிவிக்கும் சுடலை, தனக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த தூத்துக்குடி தாசில்தார் திருமணி ஸ்டாலின், கால்நடைத்துறை அதிகாரிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர்.

குடோன் அருகே தேங்கி நின்ற தண்ணீரின் மாதிரிகளைச் சேகரித்த அதிகாரிகள், அதனை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், திடீரென இறந்த 37 ஆடுகளுக்கும் சம்பவ இடத்திலேயே உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.