விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் (50). இவரது வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போனது தொடர்பாகத் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீசாரின் விசாரணையில், தெற்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த சங்கரலிங்கத்தின் உறவினரான பாக்கியலட்சுமி (40) என்பவருக்கு இத்திருட்டுச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் தெரியவந்தது. இந்த விவரம் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு, பாக்கியலட்சுமி உடனடி பணி இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டார்.
இதையடுத்துத் தலைமறைவாக இருந்த பாக்கியலட்சுமியைக் காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது, அவர் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பாக்கியலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தெற்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பாக்கியலட்சுமிக்குக் கணவர் மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

