முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 10-ஆம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

விழா தொடங்கிய முதல் நாளிலிருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி விரதம் இருந்து வருகின்றனர். விழா நாட்களில் தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு மற்றும் தங்க ரதத்தில் பவனி வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

விழாவின் 4-ஆம் நாளான நேற்று (நவ. 13) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், 5 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பகல் 1 மணிக்கு சுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாச மண்டபம் சென்றடைந்தார். அங்கு மகாதீபாராதனைக்குப் பின்னர் மாலையில் கந்த சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளிய சுவாமிக்குச் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இரவு 8 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கத் தேரில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள் கோவில் வளாகத்தில் குழுக்களாக அமர்ந்து முருகப்பெருமானின் பக்திப் பாடல்களைப் பரவசத்துடன் பாடி வழிபட்டதால், திருக்கோயில் வளாகம் முழுவதும் பக்தி மயமாகக் காட்சியளித்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான 6-ஆம் திருநாள் சூரசம்ஹாரம் நாளை (நவ. 15, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது. இதில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

TiruchendurThangasapparam.jpg

தொடர்ந்து 7-ஆம் திருநாளான நாளை மறுநாள் (நவ. 16, திங்கள்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு எழுந்தருள்கிறார். மாலையில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்று நிகழ்ச்சியும், இரவு சுவாமி குமரவிடங்கப் பெருமானுக்கும் தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.

சூரசம்ஹார விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.