வருவாயின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாகவும், மிகவும் மதிப்புமிக்க பொது நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் திடீரென முற்றிலுமாக முடங்கின.

அவுட்லுக் (Outlook) இ-மெயில் பரிமாற்றம், மைக்ரோசாப்ட் டீம்ஸ் (Teams) காணொலி ஆய்வு கூட்டங்கள் மற்றும் ஏ.ஐ. சேவைகளை வழங்கும் கோபைலட் (Copilot) உள்ளிட்ட மைக்ரோசாப்ட் 365 சேவைகள் முடங்கியதால் ஆசியா முதல் அமெரிக்கா வரை பெரும் தாக்கம் ஏற்பட்டது.

அரசுத் துறைகள், காவல் துறைகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வங்கிகள் மற்றும் விமான நிறுவனங்களின் அன்றாட செயல்பாடுகள் முடங்கின. பல பெருநிறுவனங்கள் தங்கள் அலுவலகத் தொடர்புகளுக்குத் தொலைபேசி அல்லது பேக்ஸ் போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்தத் தொடங்கின.

இந்தியாவில் வங்கிகள், அலுவலகங்கள் மற்றும் விமான சேரிகளில் தடங்கல் ஏற்பட்டது. ஏர் இந்தியா விமான சேவைகளில் நேரடி பாதிப்பு இல்லை எனத் தெரிவித்தாலும், வாடிக்கையாளர் கேள்விகள் தடையின்றிச் செல்வதை உறுதி செய்ய மின்னஞ்சல் சேவைகளைத் தற்காலிகமாக மாற்றி அமைத்தது. இண்டிகோ நிறுவனமும் தனது இ-மெயில் பரிமாற்றத்தில் இடையூறு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டதுடன், விமானப் போக்குவரத்துச் சேவைகள் தொடர்ந்து இயங்கியதாகவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் பரப்பபரப்பு ஏற்பட்டதை அடுத்து விளக்கம் அளித்த மைக்ரோசாப்ட் நிறுவனம், சர்வர்களில் ஏற்பட்ட அதிகப்படியான சுமை மற்றும் தானியங்கி சோதனைகளில் ஏற்பட்ட தோல்வி காரணமாகவே இந்த உலகளாவிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது. மேலும், இது எந்தவிதமான சைபர் தாக்குதலோ அல்லது தீங்கிழைக்கும் வைரஸால் ஏற்பட்டதோ அல்ல என்றும் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியது.

4.30 கோடிக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வரும் இந்தச் சேவைகளை மீட்கும் பணியில் இன்ஜினியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், சேவைகள் படிப்படியாக சீராகி வருவதாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.