கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை திருத்துவபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (39). இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். நேற்று (நவ. 13) அதிகாலையில் நாகர்கோவில் குழித்துறை பணிமனையிலிருந்து திருச்செந்தூருக்கு வந்த அரசுப் பேருந்தில் இவர் பணியில் இருந்தார். இப்பேருந்தை ஓட்டுநர் அன்றனிகுரூஸ் (55) ஓட்டி வந்தார்.

திருச்செந்தூர் வந்தடைந்த அந்தப் பேருந்து, அங்கிருந்து பரமன்குறிச்சி, உடன்குடி வழியாக மீண்டும் நாகர்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. உடன்குடி அருகே தாங்கியூர் பண்டாரபுரம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாகப் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த உடன்குடி சத்தியமூர்த்தி பஜாரைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் முத்துக்குமார் காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்ட அப்பகுதியினர், ஆம்புலன்ஸ் மூலம் உடன்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்திற்கு 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. அவர்கள் கும்பலாகச் சேர்ந்து பேருந்து ஓட்டுநர் அன்றனிகுரூஸ் மற்றும் நடத்துநர் மணிகண்டன் ஆகிய இருவரையும் சரமாரியாகக் கல்லாலும் கைகளாலும் தாக்கியுள்ளனர். அந்தக் கும்பலிடமிருந்து ஒருவழியாக உயிர் தப்பிய இருவரும் படுகாயங்களுடன் உடன்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே, பேருந்திலிருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் பாதுகாப்பாக வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசுப் பேருந்து ஊழியர்களைத் தாக்கிவிட்டுத் தப்பியோடிய 6 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அரசுப் பேருந்து ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.