தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அரசு அமைந்தவுடன் 717 மதுக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டது. ஆனால், அதன்பின்னர் படிப்படியாக மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. முன்னதாகத் தூத்துக்குடி மீளவிட்டான் ரோட்டில் மதுக்கடை அமைக்க முயன்றபோது அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் சப்-கலெக்டர் தலையீட்டால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்நிலையில், தற்போது குறிஞ்சிநகர் பகுதியில் புதிய தனியார்ப் பாருடன் கூடிய மதுக்கடை திறப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
குடியிருப்பு பகுதியில் மதுக்கடை வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், 14-வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மாநகரத் திமுக துணைச் செயலாளருமான கீதா முருகேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திரண்டு வந்து, திறக்கப்படவுள்ள மதுக்கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

