தூத்துக்குடி மாவட்டம் வேதமாணிக்கபுரத்தில் 11-ஆம் வகுப்பு மாணவி வீடு புகுந்து குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாகக் கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "தூத்துக்குடி மாவட்டம், வேதமாணிக்கபுரத்தில் 11-ஆம் வகுப்பு மாணவி வீடு புகுந்து குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை எனும் மோசமான சூழலுக்குள் தமிழ்நாட்டைத் தள்ளியிருக்கிறது தரங்கெட்ட தவெக அரசு.

வீடு புகுந்து பெண்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அன்றாடச் செய்தியாகிக்கொண்டிருக்கிறது. சிங்கப் பெண் அதிரடிப்படை எங்கே போய்த் தூங்கிக்கொண்டிருக்கிறது? பெண்களின் பாதுகாப்பு குறித்து வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் விஜய் அவர்களே, இந்தச் சம்பவங்கள் கொஞ்சம் கூட உங்களை உறுத்தவில்லையா?" எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.