தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், சட்டத்தைச் செயல்படுத்தும் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாகவும் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் தெரிவித்துள்ளார்.

விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சாலை வசதிகள், பொதுக் கழிப்பறைகள் மற்றும் பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனை புதன்கிழமை நேரில் சந்தித்த மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., இதுகுறித்த கோரிக்கை மனுவை அளித்தார்.

மனு அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: "தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. காவல் ஆய்வாளர் முதல் தலைமைக் காவலர் வரை தாக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஒரே நாளில் 6 காவல்துறையினர் தாக்கப்பட்டதாகவும், 17 கொலைகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அரசு பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய அரசு சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுகிறது. மக்கள் பிரச்சனைகளைப் பேசக்கூட அச்சப்படும் சூழல் நிலவினாலும், ஆயிரம் சிறைச்சாலைகளைச் சந்திக்க நேரிட்டாலும் மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்."

மேலும், விளாத்திகுளம் தொகுதியின் வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகமும் மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், மாதந்தோறும் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சியர் தவறாமல் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.