இது தொடர்பாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் பிறப்பித்துள்ள அதிகாரப்பூர்வ உத்தரவில் "தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், வங்கிச் சேமிப்பு, கடன்கள் உள்ளிட்ட அனைத்துச் சொத்து விவரங்களையும் வருகிற அக்டோபர் 31-ந் தேதிக்குள், தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு (IFHRMS) இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

வேறு யார் பெயரிலாவது அரசு ஊழியர்கள் சொத்துக்கள் வாங்கியிருந்தால், அவற்றையும் தெளிவாகக் குறிப்பிட்டு, அந்த நபருக்கும் அரசு ஊழியருக்கும் என்ன உறவுமுறைக் தொடர்பு என்பதையும் பதிவிட வேண்டும்.

மேலும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யும் அரசு ஊழியர்களின் பெயர்கள் மட்டுமே பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெறும்.

சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யத் தவறும் அரசு ஊழியர்கள், அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதியை (Code of Conduct) மீறியவர்களாகக் கருதப்பட்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.