மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்குப் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்றும், பெற்றோர் அல்லது உறவினர்களின் கடன் மதிப்பீடு (CIBIL) குறைவாக இருப்பதை மட்டும் காரணமாகக் கொண்டு கல்விக்கடன் விண்ணப்பங்களை வங்கிகள் நிராகரிக்கக் கூடாது என்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவுறுத்தியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஆகியவை இணைந்து நடத்திய, வங்கியாளர்கள் மற்றும் கல்லூரிப் பிரதிநிதிகளுக்கான சிறப்பு கல்விக்கடன் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் திரு. ஆனந்த் மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

"மாணவர்களுக்குக் கல்விக்கடன் வழங்கும் போது, பிணையாளராக இருக்கும் பெற்றோர் அல்லது உறவினர்களின் கடன் மதிப்பீடு குறைவாக இருப்பதை மட்டும் காரணமாகக் கொண்டு விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது என மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையற்ற காரணங்களால் தகுதியுள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதை வங்கிகள் தவிர்க்க வேண்டும்.

நடப்பு நிதியாண்டில் 2,000 மாணவர்களுக்கு ரூ.50 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலாம்பாதியில் 300 விண்ணப்பங்களே வந்துள்ள நிலையில், மீதமுள்ள ஆறு மாதங்களில் இலக்கை எட்டுவதுடன் கடந்த ஆண்டை விட அதிக மாணவர்களுக்குக் கடன் வழங்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

மேலும், கல்லூரிகளிலேயே சிறப்பு முகாம்கள் நடத்தி மாணவர்களை இணையவழியில் விண்ணப்பிக்கச் செய்ய வேண்டும் என்றும், சந்தேகங்களைத் தீர்க்க வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டன.

கல்விக்கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தொகையை மாணவர்களுக்கு வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெளிமாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் படிக்கும் மாணவர்களின் ஆவணப் பிரச்சனைகளை விரைந்து தீர்க்க வேண்டும் என்றும் ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச. வித்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ் மணிகண்டன், துணை ஆட்சியர் (பயிற்சி) மு. பிரதீபா உட்படப் பல அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள் மற்றும் கல்லூரிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.