தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளதை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பிரதான மற்றும் உட்புறச் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை உடனடியாகச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

பருவமழையின் போது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகள், உட்புறச் சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கியச் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஜே.சி.பி. இயந்திரங்கள், ரோலர்கள் மற்றும் தார்-பிடுமன் கலவை உள்ளிட்ட தேவையான மூலப்பொருட்களைக் கொண்டு, அப்பள்ளங்கள் உடனடியாக மூடப்பட்டுச் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சிப் பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் மற்றும் ஆபத்தான பள்ளங்கள் இருப்பது தெரியவந்தால், பொதுமக்கள் உடனடியாக மாநகராட்சியின் 1800 203 0401 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா தெரிவித்துள்ளார்.