கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் இரட்டிப்பு பணிகள், மேம்பாலங்கள், நீர்வழி பாதைகள், கீழ்பாலங்கள், இணைப்பு சாலைகள், என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடங்கி 7 ஆண்டுகள் ஆன பொழுதும் இந்த பணிகள் மிக மந்த கதியில் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு இந்த பணிகளை விரைவில் முடிக்க வேண்டுமென பல்வேறு நிலைகளில் ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறார்.

பணிகளை முடிக்க நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை ரயில்வே நிர்வாகம் காரணம் காட்டி வந்தது. மேலும் இந்த பணிகள் சீரான வேகத்தில் மற்றும் மக்கள் தேவைக்கு ஏற்ப நடைபெறாத காரணத்தால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படுவதால் மாவட்ட ஆட்சியர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளை கொண்ட ஒரு ஆலோசனை கூட்டம் ஒன்றினை விஜய் வசந்த் எம்.பி கோரினார். அதற்கேற்ப இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர், பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட நிர்வாகத்தின் சம்பத்தப்பட்ட அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அகஸ்தீஸ்வரம் மற்றும் கொட்டாரத்தில் பாலங்கள், நாகர்கோவில் டவுன் இரயில் நிலையத்திலிருந்து நான்கு வழி சாலை இணையும் விதத்தில் இணைப்பு சாலை, நீர்வழி பாதைகள் 248, 249 சானலை கட்டுவதற்கும், வாகனங்கள் செல்லும் அளவுக்கு சாலை அமைப்பதற்கும், மின்கம்பங்கள் நடுவதற்கும், கண்டன்விளை ரயில்வே கேட்டில் புதிய மேம்பாலம் அமைக்கவும், இரணியல் தக்கலை சாலை கீழ்பாலத்தின் கிழக்கு, மேற்கு பகுதியில் போதுமான இணைப்பு சாலை அமைக்கவும், இரணியல் இரயில் நிலையம் அருகில் கட்டிய பாலம் எண் 236 பேருந்துகள் சென்று வரும் பாலம் போதுமான அகலம் மற்றும் இணைப்பு சாலைகள் அமைக்கவும் போதுமான நிலங்கள் தேவையுள்ளதால், இந்த நிலங்களை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஆவன செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

மேலும் நுள்ளிவிளை மேம்பால பணிகளை விரைவில் முடித்து அந்த சாலையை திறப்பது குறித்தும், வெகு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள விரிகோடு மேம்பால பணிகளை மாநில அரசு மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து முடிவெடுத்து மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஒழுகினசேரி மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவையான மேம்பாலங்கள் மற்றும் ரயில் நிலைய மேம்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ரயில்வே நிர்வாகம் தரப்பில் துணை தலைமை பொறியாளர், மூத்த பிரிவு பொறியாளர், மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர், ரயில்வே வட்டாட்சியர், வட்டாட்சியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.