நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரயில் நிலைய யார்டில் நீண்ட நாட்களாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டி ஒன்றிலிருந்து, அடையாளம் தெரியாத பெண்ணின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 11-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட அந்த ரயில் பெட்டி இயக்கப்படாமல் யார்டில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், வழக்கமான தூய்மைப் பணிகளுக்காகத் துப்புரவுப் பணியாளர்கள் இன்று காலை அந்த ரயில் பெட்டிக்குள் சென்றனர். அப்போது அங்கு தோராயமாக 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து உடனடியாக நாகர்கோவில் இருப்புப் பாதை (ரயில்வே) காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மீட்கப்பட்ட சடலம் மிகவும் அழுகிய நிலையில் இருப்பதால், இப்பெண் இறந்து சுமார் 5 முதல் 7 நாட்கள் ஆகியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் ரயில் பெட்டிக்குள் எப்படி வந்தார்? இது கொலையா அல்லது தற்கொலையா? அல்லது யாரேனும் அவரை அடித்துக் கொன்று ரயில் பெட்டியில் வீசிச் சென்றனரா? என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

