ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ (POCSO) வழக்கில் திறம்படச் செயல்பட்டு எதிரிக்குத் தண்டனை பெற்றுத் தந்த காவல் ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலரைப் பாராட்டி, நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில், காவல் ஆய்வாளர் லெ. லட்சுமி பிரபா துரிதமாகவும் திறம்படவும் புலனாய்வு மேற்கொண்டார். மேலும், இவ்வழக்கின் உரிய சாட்சிகள் மற்றும் ஆவண ஆதாரங்களை முறையாகச் சேகரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இவ்வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைச் சீரிய முறையில் ஒருங்கிணைத்து, குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதில் தலைமைக் காவலர் மு. அரிராணி முக்கியப் பங்காற்றினார்.
பெண் காவல்துறையினரின் இத்தகைய சிறப்பான மற்றும் அர்ப்பணிப்புமிக்க பணியைப் பாராட்டும் வகையில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு அவர்கள், இன்று (07.10.2026) இருவரையும் சரக அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து அவர்களின் சிறப்பான புலனாய்வுப் பணியைப் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

