தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் அருகே உள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா. இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். பிரியாவின் சகோதரி சுப்புலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த காவலர் முத்துக்குமார் (எ) முத்துகுமரன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி (01.09.2026) பிரியா படுகொலை செய்யப்பட்டார்.

இது குறித்துப் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, அப்போது தட்டார்மடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் முத்துக்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான காவலர் மீது புதுக்கோட்டை, சாயர்புரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஏற்கெனவே 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட பிரியாவின் குடும்பத்தினரைச் சிலர் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இக்கொலை வழக்கிலிருந்து காவலர் முத்துகுமரனை விடுவிப்பதற்காக, அவரது உறவினர்களான வள்ளியூர் சரகத்தில் பணியாற்றி வரும் முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்த மயிலேறும் பெருமாள், காவல்துறையைச் சேர்ந்த ரமேஷ், சரவணன் மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி சிவன்பிள்ளை ஆகியோர் கூட்டு முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், காவல்துறைப் பணியைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கஞ்சா உள்ளிட்ட வழக்குகளில் குண்டர் தடுப்புச் சட்டம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, பிரியா படுகொலை செய்யப்பட்டு 90 நாட்களைக் கடந்தும் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு காவலர் என்பதாலும், காவல்துறையினரின் உறவினர் என்பதாலும் அவர் மீது கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயக்கம் காட்டுவதாக உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே, தங்கள் குடும்பத்தினருக்கு உரியப் பாதுகாப்பு வழங்கக் கோரியும், இவ்வழக்கில் பாரபட்சமின்றி கூடுதல் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல்துறை ஐ.ஜி., டி.ஐ.ஜி. மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்குப் புகார் மனு அளித்துள்ளனர்.