தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்டபதி பெருமாள் கோவில் ஆகியவற்றின் செயல் அலுவலராகத் தமிழ்ச்செல்வி கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று (நவ. 13) மாலை செயல் அலுவலர் தமிழ்ச்செல்வியைப் பணியிடை நீக்கம் செய்து தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சௌ. சாலி உத்தரவிட்டுள்ளார். மேலும், தூத்துக்குடி சிவன் கோவில் செயல் அலுவலர் பொறுப்பைக் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம் கூடுதலாகக் கவனிப்பார் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு வைகுண்டபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்காகப் பாலாலயம் செய்யப்பட்டுத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2023-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்ச்செல்வி இப்பொறுப்பில் இருந்தபோது, பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்காகப் பக்தர்களிடம் நன்கொடைகள் வசூலிக்கப்பட்டதாகவும், மேலும் கோவில் வங்கி இருப்பிலிருந்த ரூ. 4 கோடி நிதி எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு கும்பாபிஷேகத்திற்காக வசூலிக்கப்பட்ட நிதி மற்றும் வங்கியில் இருந்த பணத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் கோவில் உபயதாரர்கள் சார்பில் தமிழக முதலமைச்சருக்குப் புகார் மனு அனுப்பப்பட்டது.
அதில், "பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெறாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும், திருப்பணி நிதியில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும்" குற்றம்சாட்டி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டிருந்தது.
இப்புகாரின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நடத்திய விசாரணையில், பல கோடி ரூபாய் நிதி முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், தமிழ்ச்செல்வி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேறு சில கோவில்களுக்கும் பொறுப்பு அதிகாரியாக இருந்துள்ளதால், அந்தக் கோவில்களின் கணக்கு வழக்குகளிலும் முறைகேடுகள் ஏதேனும் நடந்துள்ளதா என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த அதிரடி நடவடிக்கை தூத்துக்குடி சிவன் மற்றும் பெருமாள் கோவில் அறங்காவலர்கள், பட்டர்கள் மற்றும் மாவட்டத்தின் பிற கோவில் பணியாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

