தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் ஒரு ஆட்டை, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2பேர் திருடித் தங்கள் பைக்கில் ஏற்றித் தப்ப முயன்றுள்ளனர்.

இதைச் தற்செயலாகக் கவனித்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாகச் சுதாரித்துச் செயல்பட்டு, ஆட்டுடன் தப்பிக்க முயன்ற இருவரையும் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து பிடிபட்ட இருவரையும் பொதுமக்கள் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் குறித்துப் புதுக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பிடிபட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தியதில், அவர்கள் தூத்துக்குடி கணேசன் காலனியைச் சேர்ந்த கணேசன் மகன் ஆரோக்கிய அந்தோணி (43), மற்றும் அவரது மகன் அந்தோணி முத்து (20) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

மேலும் பெதுமக்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டுள்ளதால் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்புடன் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் ஆடு திருட முயன்ற தந்தை மகன் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.