தூத்துக்குடி சோட்டையன் தோப்பு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் மகன் மணிகண்டன் (31). இவர் தூத்துக்குடியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்குக் கலைவேணி (26) என்ற மனைவியும், 6 வயதில் மகளும் உள்ளனர். இவரது மனைவி தற்போது பி.சுப்பிரமணியபுரம் ஊரில் உள்ள தனது பெற்றோார் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று வேலை முடித்த மணிகண்டன், தனது மனைவியைத் தூத்துக்குடியில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகத் தனது பைக்கில் தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையில் உள்ள குறுக்கு சாலை வழியாக வாலசமுத்திரம் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார்.
வாலசமுத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் அவர் சென்றுகொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரது பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஒட்டப்பிடாரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, மணிகண்டனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய வாகனம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

