நீலகிரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த கனமழை காரணமாக மலைப்பாதைகளின் பல்வேறு இடங்களில் மண் தளர்வடைந்து சாலைகளில் சரிந்து விழுந்து வருகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மலைப் பாதையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
பர்லியார் மலைப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, எதிர்பாராத விதமாக சாலையில் ஏற்பட்ட மண் சரிவுக் குவியலுக்குள் சிக்கிக் கொண்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் விரைந்து வந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
அதிர்ஷ்டவசமாகப் பேருந்தில் பயணம் செய்த 6 பயணிகளும் எந்தவிதக் காயமுமின்றிப் பத்திரமாக வெளியேறினர். மண் குவியலுக்குள் சிக்கித் தவித்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டிருப்பதாலும் வாகனப் போக்குவரத்து முழுவதுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் பல இடங்களில் ஏற்பட்டுள்ள மண் சரிவுச் சீரமைப்புப் பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் ஆய்வு செய்தார். தற்போது சரிந்து விழுந்த மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர்.
மலைப் பாதையில் தொடர்ந்து மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், இன்று முதல் 3 நாட்களுக்குச் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு மேற்கொள்ளும் பயணத்தைத் தவிர்க்குமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

