ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற முதலமைச்சர் பாதுகாப்புப் பணிக்குச் சென்று திரும்பிய வேனில், உடன் வந்த பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நெல்லை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை நெல்லை மாநகர போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

நெல்லை அருகே உள்ள தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் குமார் (49). இவர் நெல்லை மாநகரத்தில் உள்ள மேலப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருகிறார். இதனிடையே, ஈரோடு பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் கலந்துகொண்ட அரசு விழா பாதுகாப்புப் பணிக்காக நெல்லை மாநகரத்தில் இருந்து ஆண் மற்றும் பெண் காவலர்கள் காவல்துறை வாகனத்தில் சென்றுள்ளனர்.

பாதுகாப்புப் பணிகள் முடிந்ததும் அன்றிரவே அவர்கள் அனைவரும் காவல்துறை வாகனத்தில் மீண்டும் நெல்லைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் குமாருக்கு முன்னால் உள்ள இருக்கையில் பெண் காவலர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி அந்தப் பெண் காவலருக்குக் குமார் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் காவலர், உடனடியாகக் குமாரைச் சத்தம்போட்டுக் கண்டித்துள்ளார்.

நெல்லைக்கு வந்தடைந்ததும், இதுகுறித்து நெல்லை மாநகரக் காவல் ஆணையர் ரூபேஷ்குமார் மீனாவிடம் பாதிக்கப்பட்ட பெண் காவலர் நடந்த சம்பவங்களைத் தெரிவித்தார்.

காவல் ஆணையரின் அறிவுறுத்தலின் பேரில், பெண் காவலர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். புகாரின் பேரில் பாலியல் தீண்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் குமாரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை தீபத்திருவிழா பாதுகாப்புப் பணிக்குச் சென்றபோதும் இதேபோல் மற்ற பெண் காவலர்களிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அப்போது அச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.