கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் சந்திக்க அழைத்து 17 வயது சிறுவன் கொடூரமகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இளம்பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் அருகே பாங்கப்பாறையைச் சேர்ந்தவர்கள் மது குமார் - தர்மஜா தம்பதி. இவர்களது மகன் அபிராம் (17), தனியார் ஆங்கிலப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் நண்பர்களைப் பார்ப்பதாகக் கூறிச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை மது குமார் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
போலீசார் தீவிரமாகத் தேடிய நிலையில், அபிராமும் ஒரு மாணவியும் காதலித்து வந்ததும், அதே மாணவியை அபிராமுடன் படிக்கும் மற்றொரு மாணவனும் காதலித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அந்த மாணவியின் இன்ஸ்டாகிராம் பாஸ்வேர்டு அபிராமுக்குத் தெரிந்திருந்த நிலையில், இரண்டு பேருக்கும் இடையே நெருக்கம் அதிகரிப்பதை அறிந்த மற்றொரு மாணவன் அபிராமைக் கொல்லத் திட்டமிட்டான்.
சம்பவத்தன்று அந்த மாணவி அனுப்புவது போல் அபிராமுக்கு மெசேஜ் அனுப்பி ஓரிடத்திற்கு வரவழைத்துள்ளனர். காதலிதான் அழைக்கிறாள் என நம்பி அங்கு சென்ற அபிராமிடம், "என்னுடைய காதலியை நீ எப்படி காதலிக்கலாம்" என்று கூறி ஆத்திரத்தில் பெல்ட்டால் அபிராமின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளனர்.
பின்னர் உடலை மறைப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த உமர் என்பவரை அழைத்து, இருபுறமும் சேர்ந்து உடலைச் சாக்குமூட்டையில் கட்டி ஆள் நடமாட்டம் இல்லாத பாறைப் பகுதியில் போட்டுவிட்டுத் தப்பியோடினர்.
போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த வழக்கில் 17 வயது சிறுவன், 18 வயது இளம் பெண் மற்றும் உமர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவன் அளித்துள்ள வாக்குமூலத்தின் உண்மைத்தன்மை மற்றும் கொலைக்கான முழுப் பின்னணி குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

