'மேக் இன் இந்தியா' திட்டத்தால் தமிழ்நாடு பெரும் வளர்ச்சி கண்டு வருவதாகத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

சென்னையில் நடைபெற்ற இச்சிறப்பு விழாவில் பிரதமரும், தமிழக முதலமைச்சர் விஜயும் இணைந்து நெடுஞ்சாலை, ரெயில்வே மற்றும் துறைமுகம் சார்ந்த பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தனர். விழாவின் தொடக்கமாகத் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம் தெரிவித்து தனது உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்ட இன்றைய நாள் தமிழ்நாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் எனக் குறிப்பிட்டார். மேலும், நவராத்திரியின் முதல் நாளில் பவித்திரமான பூமியான தமிழ்நாட்டில் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தது தனது பாக்கியம் எனவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "அன்றாடப் பயணத்தை எளிதாக்கும், தொழில்துறையை மேம்படுத்தும் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. சென்னை ஐஐடி மூளை ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் ஆய்வுகள் பொது சுகாதாரத்துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். பலமான உற்பத்தித் துறையை உருவாக்கச் சரியான சாலை வசதிகள், ரெயில்வே மற்றும் துறைமுகங்கள் அவசியமாகும்.

மத்திய அரசு தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பொருட்களின் உற்பத்தியை ஊக்கப்படுத்தி வருகிறது. உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்களுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். 'மேக் இன் இந்தியா' திட்டத்தால் தமிழ்நாடு வளர்ச்சி கண்டு வருகிறது. மொபைல் உற்பத்தியில் உலகில் 2-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

Modivijaytutyairport.jpg

உற்பத்தித் துறையில் நாடு முன்னேறி வருவதால் லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.