களியக்காவிளை அருகே கல்லூரிக்குச் சென்றுவிட்டு மாயமான 18 வயது நர்சிங் கல்லூரி மாணவி, தனது காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள இளந்தோட்டுவிளை மலையடி பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி, மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்குச் சென்ற அவர் வீடு திரும்பாததால், அவரது தாயார் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், மாயமான மாணவி குலசேகரம் பகுதியைச் சேர்ந்த தனது காதலனுடன் களியக்காவிளை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். தங்களுக்குத் திருமணம் முடிந்துவிட்டதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
தகவலறிந்து காவல் நிலையத்திற்கு வந்த தாயுடன் செல்ல மாணவி மறுத்துவிட்டதால், இருவரும் மேஜர் என்பதன் அடிப்படையில் உரிய விசாரணைக்குப் பிறகு மாணவி தனது காதலனுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

