தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் குருசாமியின் மகன் மூர்த்தி (48). இவர் இன்று கோவில்பட்டி புது ரோட்டில் இருந்து தனது சைக்கிளில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே எட்டயபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, வடக்கே இருந்து வந்த டிப்பர் லாரி இடதுபுறமாகக் கிழக்கு நோக்கித் திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாகச் சைக்கிளில் சென்ற மூர்த்தி நிலைதடுமாறி லாரியின் சக்கரத்திற்குள் விழுந்தார்.

இதில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் மூர்த்தி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த கோவில்பட்டி கிழக்குக் காவல் நிலைய காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இவ்விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி கீழக்கரந்தையைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கண்ணன் (22) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.