தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (08.10.2026), தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் காசநோய் இல்லா இந்தியா இயக்கத்தின் கீழ் காசநோய் இல்லாத கிராம ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கி, ஜோஷ் அணியினையும் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், மத்திய காசநோய் பிரிவு My Bharat அமைப்புடன் இணைந்து காசநோய் இல்லாத இந்தியா இயக்கத்தின் கீழ் காசநோய் தொடர்பான விழிப்புணர்வை மதிப்பீடு செய்வதற்கான சமூக அடிப்படையிலான ஆய்வை நாடு முழுவதும் 55 மாவட்டங்களில் மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, கடலூர், தர்மபுரி, தேனி ஆகிய 5 மாவட்டங்கள் இம்முயற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் My Bharat தன்னார்வலர்கள் மற்றும் NCC மாணவர்கள் உதவியுடன் சமூக அளவிலான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆகவே, காசநோய் ஒழிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்கள் அனைவரும் தீவிரமாக பங்கேற்று, வீடுதோறும் நடைபெறும் மதிப்பீட்டின் போது ஜோஷ் குழுவினருக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். மேலும், 2 வாரங்கள் அல்லது அதற்கு மேலாக நீடிக்கும் இருமல், காய்ச்சல், உடல் எடை குறைதல், இரவு நேரத்தில் அதிகமாக வியர்த்தல் அல்லது காசநோய் தொடர்பான பிற அறிகுறிகள் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி, காசநோய் பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தின் அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், இளைஞர் அமைப்புகள், NCC My Bharat தன்னார்வலர்கள், தனியார் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட்டு, காசநோய் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தியுள்ளார்.
JOSH (Joint squad for Health) எனப்படுவது காசநோய் (TB) குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்துதல், காசநோய் ஆரம்பநிலையிலேயே கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இளைஞர்கள் மற்றும் சமூக தன்னார்வலர்களின் தீவிர பங்கேற்புடன் செயல்படுத்தப்படும் சமூக அடிப்படையிலான ஒரு குழு முயற்சியாகும்.தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் காசநோய் விழிப்புணர்வு பிரசுரங்களை வெளியிட்டு, ஜோஷ் அணியினை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் 2025 – 26 ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 403 கிராம ஊராட்சிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோலின் அடிப்படையில் 75 கிராம ஊராட்சிகள் காசநோய் இல்லாத கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 12 ஊராட்சிகளுக்கு வெள்ளி விருதும், 63 ஊராட்சிகளுக்கு வெண்கல விருதும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். முன்னதாக, காசநோய் எதிர்ப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொள்ள அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.
இந்நிகழ்வில், இணை இயக்குநர் (நலப்பணிகள்) பிரியதர்ஷினி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் பத்மநாபன், துணை இயக்குநர்கள் (காசநோய்) சுந்தரலிங்கம், யமுனா (தொழுநோய்), பொன்ரவி (குடும்பநலம்), தலைமை மருத்துவர், நெஞ்சக நோய்த்துறை சங்கமித்ரா, மாவட்ட இளையோர் அலுவலர் மதுமிதா, மாவட்ட காசநோய் மையம், மருத்துவ அலுவலர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி செயலாளர்கள், அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

