தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் அருகில் உள்ள ஓடைப் பகுதியில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குச் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த காரை சோதனை செய்தபோது, விற்பனைக்காகத் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்-லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாகக் கிழக்குக் காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, புகையிலைப் பொருட்களைக் காரில் வைத்து விற்பனை செய்ய முயன்ற கோவில்பட்டி ஊரணி பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் பால்பாண்டியன் (43) என்பவரை கைது செய்தார். அவரிடமிருந்து 23 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

