ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியாவின் பழமையான நாகரிகத்தையும், அதன் தனித்துவமான மொழிப் பன்முகத்தன்மையையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்தியாவைப் பற்றித் தான் மேலும் அதிகமாக அறிந்துகொள்ளும்போது, அதன் மீது தனக்குள்ள ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செர்பிய திரைப்படத் தயாரிப்பாளர் எமிர் குஸ்துரிகாவுக்கு ரஷ்ய அதிபர் புதின் அளித்த நேர்காணலின் முழு உரையை கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்நேர்காணலில் இந்தியா குறித்துப் புதின் கூறியதாவது:"மிகவும் பழமையான இந்திய நாகரிகத்தை எடுத்துக்கொள்வோம். இது மிகவும் சுவாரஸ்யமானது. இதைப் பற்றி நான் எவ்வளவு அதிகமாகத் தெரிந்துகொள்கிறேனோ, அவ்வளவு அதிகமாக இதில் ஆர்வம் கொள்கிறேன்."
தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது உரையாடலை நினைவுகூர்ந்த புதின், இந்தியாவில் எத்தனை பேர் முதன்மையான மொழியைப் பேசுகிறார்கள் என்று தான் அவரிடம் கேட்டதாகத் தெரிவித்தார்.
"இந்தியாவின் 1.5 பில்லியன் (150 கோடி) மக்கள் தொகையில், சுமார் 600 மில்லியன் (60 கோடி) மக்கள் அந்த மொழியைப் பேசுவதாகப் பிரதமர் மோடி என்னிடம் கூறினார். மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தங்களது சொந்த மொழிகளைப் பேசுகிறார்கள் என்றும் அவர் விளக்கினார். இது ஆச்சரியமாக இல்லையா? உண்மையில் இது மிகவும் ஆச்சரியமானதுதான்!" எனப் புதின் வியப்புடன் பாராட்டினார்.
இதே நேர்காணலில் ரஷ்யாவின் மதப் பன்முகத்தன்மை குறித்துப் பேசிய புதின், ரஷ்யா நான்கு பாரம்பரிய மதங்களை (பௌத்தம், யூத மதம், இஸ்லாம் மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவம்) அங்கீகரிப்பதாகக் கூறினார். வெவ்வேறு மதங்களாக இருந்தாலும் அவை அனைத்தும் ஒரே மாதிரியான அடிப்படை விழுமியங்களைக் கொண்டுள்ளதாகவும், பாரம்பரிய விழுமியங்களைப் பாதுகாக்கும் ஒரு 'பேழையாக' ரஷ்யா திகழும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், உக்ரைன் போர் குறித்துப் பேசிய அவர், உக்ரைனிய வீரர்கள் ரஷ்யத் தரப்பில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். "அவர்கள் சரணடைய வேண்டும் என்று நான் கூற விரும்பவில்லை; ஏனெனில் அது ஒருவித அவமானகரமான செயலாகத் தோன்றலாம். அதற்குப் பதிலாக, அவர்கள் எங்கள் தரப்பிற்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்; ஏனெனில் இது நம் இரு தரப்புக்கும் பொதுவான பக்கம் மற்றும் வரலாற்றின் சரியான பக்கமும் கூட" என ரஷ்ய அதிபர் தெரிவித்தார்.

