குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. இராதாகிருஷ்ணன் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் மற்றும் வ.உ.சி. கல்லூரி ஆகிய இடங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைத் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. இராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த தீவிர ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு, தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும் வ.உ.சி. கல்லூரி வளாகம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அங்குப் பாதுகாப்புப் பணிகள் எந்தெந்தப் பகுதிகளில் எவ்வாறு பலப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும், காவல்துறையினர் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உரிய அறிவுரைகளை வழங்கினார்.

DIG2.jpg

இந்த ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் துறை சார்ந்த காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.