பாகிஸ்தான் மற்றும் ஈரான் இடையிலான எல்லைகள் மூடப்பட்டதன் காரணமாகப் பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டருக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 12 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.7,000 ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தான் – ஈரான் இடையிலான 'காப்ட் – ரிம்தான்' மற்றும் 'டஃப்தான்' ஆகிய எல்லைச் சோதனைச் சாவடிகள் கடந்த 17-ம் தேதி மூடப்பட்டன. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் கடத்தலைத் தடுப்பதற்காகத் தற்காலிகமாக எல்லைகள் மூடப்பட்டதாகப் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகவே எல்லை மூடப்பட்டதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
ஈரானிலிருந்து நாள்தோறும் சுமார் 7,000 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) பாகிஸ்தானுக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் காப்ட் – ரிம்தான் எல்லை வழியாக மட்டுமே 4,000 டன்னுக்கும் அதிகமான எல்பிஜி கொண்டு வரப்படுகிறது. தற்போது எல்லை முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளதால் இறக்குமதி தடைபட்டுப் பாகிஸ்தானில் கடும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது.
இதுகுறித்து குவாதர் வர்த்தக மற்றும் தொழில் துறைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஷம்சுல் ஹக் கூறுகையில், "எல்லை மூடல் காரணமாகப் பாகிஸ்தானில் 12 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.4,500-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்ந்துள்ளது. விநியோகத் தடை நீடித்தால் விலை மேலும் உயரக்கூடும். எல்பிஜி ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் உள்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் எல்லையின் இருபுறமும் வரிசையாக நின்று கொண்டிருக்கின்றன" என்றார்.
இதனிடையே, நிலமையைச் சீரமைக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி டெஹ்ரானுக்குச் சென்று ஈரான் தலைவர்களுடன் எல்லைப் பிரச்சினைகள் மற்றும் வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது குறித்துத் தீவிர ஆலோசனை நடத்தி உள்ளார்.

