கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள ஆவின் பாலகம், அம்மா உணவகம், நவீன கட்டணக் கழிப்பிடம், ஒருங்கிணைந்த நவீன சிசிடிவி கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்துநிலையத்தில் அமைந்தள்ள அம்மா உணவகத்தில் உணவின் தரம், சமைக்கப்படும் இடம் மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் எப்போதும் உயர்தரமாக இருக்க வேண்டுமென பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், ஆவின் பாலகத்தில் பால் மற்றும் பால் பொருட்களின் இருப்பு மற்றும் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்கள் பயன்படுத்தும் நவீன கட்டணக் கழிப்பிடங்களின் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. பேருந்து நிலையப் பகுதியில் சுகாதாரத்தை எப்போதும் பராமரிக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கடைகளில் பொருட்களின் தரம், காலாவதி தேதி உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, ஒருங்கிணைந்த நவீன சிசிடிவி கட்டுப்பாட்டு அறை பார்வையிடப்பட்டது. பேருந்து நிலைய வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

பொதுமக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளில் எந்தவித தொய்வும் ஏற்படக்கூடாது. பேருந்து நிலையத்தை மிகச் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

ஆய்வில் நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் பா.பாலசுப்பிரமணியன், துணை மேலாளர் மகேஷ், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.