இசையமைப்பாளர் அனிருத் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று (நவம்பர் 21) மாலை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் விஜய், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் திரளாகப் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

காதலித்து வந்த அனிருத் - காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து, இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை விமரிசையாக நடைபெற்றது.

இத்திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்கள் சகிதமாக நேரில் வந்து அனிருத் - காவ்யா மாறன் தம்பதிக்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். முதலமைச்சர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரும் மணமக்களை வாழ்த்தினார்.

மேலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் கனிமொழி, ஆ. ராசா, முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராகவா லாரன்ஸ், பிரபு, உதயா, சதீஷ், நடிகை ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு, சௌந்தர்யா ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

cmvijayRajiniStalin.jpg

விழாவிற்கு வருகை தந்த விருந்தினர்களை அனிருத்தின் பெற்றோர் ரவிச்சந்தர் - லட்சுமி தம்பதியினரும், காவ்யா மாறனின் பெற்றோர் கலாநிதி மாறன் - காவேரி தம்பதியினரும் வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் விருந்தினர்களுக்கு 38 வகையான பதார்த்தங்கள் நிறைந்த அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.