ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு செயல்பாடுகளை மிகச் சிறப்பாக முன்னெடுக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 54 பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் சங்கீதா சின்னராணி அவர்களின் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமிற்கு, உதவித்திட்ட அலுவலர் முருகன் தலைமையுரையாற்றிப் பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.
இப்பயிற்சியில் பள்ளி மேலாண்மைக்குழுவின் முக்கியத்துவம், அதன் நோக்கங்கள் மற்றும் அக்குழுவின் செயல்பாடுகளால் பள்ளிகளுக்குக் கிடைத்த முன்னேற்றங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பள்ளி மேலாண்மைக்குழுவில் இயற்றப்படும் தீர்மானங்கள் மற்றும் பள்ளியின் அவசரத் தேவைகள் சார்ந்த தீர்மானங்கள் எவ்வாறு பிற அரசுத் துறைகள் மூலமாகப் பள்ளிகளுக்கு நிறைவேற்றித் தரப்படுகின்றன என்பது செயல்பாடுகள் மற்றும் எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக விளக்கப்பட்டது.
குறிப்பாக, 'பள்ளி மேலாண்மைக்குழுவில் தலைமையாசிரியர்களின் பொறுப்புகளும் கடமைகளும்' என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கப்பட்டது. அதில், பள்ளிகளில் இயற்றப்படும் தீர்மானங்களை 'பெற்றோர் செயலி'யில் பதிவு செய்யும் முறைகள் மற்றும் தீர்மானங்கள் நிறைவேறியவுடன் அதனைப் புகைப்படத்துடன் செயலியில் பதிவேற்றம் செய்து முடிப்பது குறித்த தொழில்நுட்ப விவரங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. பயிற்சியில் பகிரப்பட்ட அனைத்துக் கருத்துகளையும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்கள் உற்சாகமாகச் செயல்படத் தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இப்பயிற்சி முகாமில் மாநிலக் கருத்தாளர்கள் சிவரஞ்சனி, கோகிலா மற்றும் மாவட்டக் கருத்தாளர் முத்துமாரி ஆகியோர் கருத்தாளர்களாகச் செயல்பட்டுப் பயிற்சி அளித்தனர். நிறைவாக, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் நிகழ்வினை ஒருங்கிணைத்து நன்றியுரை ஆற்றினார்.

