தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு இன்று (நவம்பர் 3) தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலையில் அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதனையொட்டி அன்னை ஸ்ரீ பாகம்பிரியாளுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிரதான பட்டர்களான செல்வம், சண்முகம், சுப்பிரமணியன், குமார் ஆகியோர் சிறப்பு பூஜைகளை நடத்தினர்.தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் வெள்ளத்தில் அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் திருத்தேரில் எழுந்தருளினார்.

Therottamtuty.jpg

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தேரை வடம் பிடித்துத் தொடங்கி வைத்தார். இவர்களுடன் கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி, ஏவிஎம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் முத்துராஜ், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி முகமை பரிபாலன சங்கச் செயலாளர் எம்.எஸ்.எஸ்.கந்தப்பன்பிள்ளை, அறங்காவலர் குழுத் தலைவர் கந்தசாமி, த.வெ.க. நிர்வாகிகள் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்துகொண்டு 'அரோகரா' கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கீழ ரத வீதியில் இருந்து புறப்பட்ட திருத்தேர், தெற்கு ரத வீதி, மேல ரத வீதி மற்றும் வடக்கு ரத வீதி வழியாக வலம் வந்து மீண்டும் நிலையைச் சென்றடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டுப் பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்குக் குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. தூத்துக்குடி நித்தியானந்தம் அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்குச் சிறப்பு ஐப்பசி தேரோட்ட விருந்து (அன்னதானம்) வழங்கப்பட்டது.

திருவிழாவின் சிகர நிகழ்வான அருள்மிகு சங்கரராமேஸ்வரர் - அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் திருக்கல்யாண வைபவம் வரும் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளைத் திருக்கோவில் நிர்வாகத்தினரும் அறங்காவலர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

therottamkalai4.jpg