காலை 6.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை திரையிடலாம் எனவும், வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைக் காலங்களுக்கும் இச்சலுகை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களுக்குத் திரையரங்குகளில் நாளொன்றுக்கு 6 காட்சிகள் வரை திரையிட்டுக்கொள்ளத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அனுமதி அளித்துள்ளது.
தமிழ் பிலிம் ஆக்டிவ் புரோடியூசர்ஸ் அசோசியேஷன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தன.
அதில் முக்கியமாக, தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் நாளிலிருந்து ஒரு வார காலத்திற்கு, நாளொன்றுக்குக் காலை 06.00 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 02.30 மணி வரை 6 காட்சிகள் திரையிட அனுமதிக்குமாறு கோரப்பட்டிருந்தது.
1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளின்படி, திரையரங்குகளில் தினசரி 4 காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டு வந்தன. தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு, புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் 7 நாட்களுக்கும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் 5 காட்சிகள் வரை திரையிட அனுமதி வழங்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது.
திரைப்படத் துறையினரின் கோரிக்கையைப் பரிசீலித்த தமிழக அரசு, தமிழ்நாடு திரையரங்குகள் விதிகளில் திருத்தம் செய்ய உத்தேசித்து இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.அதன்படி புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் நாளில் இருந்து ஒரு வாரத்திற்குத் தினசரி 6 காட்சிகள் வரை திரையிடலாம்.
காலை 06.00 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 02.30 மணி வரை காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்படுகிறது.சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட வார இறுதி நாட்கள், உள்ளூர் பண்டிகை நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் இந்த 6 காட்சிகள் திரையிடும் அனுமதி பொருந்தும்.
அரசின் இந்த முடிவால் திரைப்படத் தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

