தூத்துக்குடி பி.என்.டி. காலனி 10-வது தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (54). லாரி ஓட்டுநரான இவருக்குச் செல்வி (50) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், செல்விக்கும் நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்த பாப்பு என்பவரின் மகன் ஆறுமுகம் (54) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்துத் தெரியவந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி கடுமையான தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று காலை 9 மணி அளவில் செல்வி தனது கள்ளக்காதலன் ஆறுமுகத்துடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது பணி முடிந்து எதிர்பாராதவிதமாக வீட்டிற்குத் திரும்பிய கருப்பசாமி, தனது மனைவி கள்ளக்காதலனுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியும் கடும் ஆத்திரமும் அடைந்தார்.
ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி செல்வியை நோக்கிச் சரமாரியாக வெட்டினார். இதில் தலையிலும் உடலிலும் பலத்த காயமடைந்த செல்வி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கள்ளக்காதலன் ஆறுமுகம், வீட்டின் மற்றொரு அறைக்குள் ஓடிச் சென்று கதவை உட்புறமாகப் பூட்டிக் கொண்டார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த செல்வியை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் தனசேகரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மனைவியை வெட்டிய கணவன் கருப்பசாமி மற்றும் அறைக்குள் பூட்டிப் பயந்து ஒளிந்திருந்த கள்ளக்காதலன் ஆறுமுகம் ஆகிய இருவரையும் காவல்துறையினர் பிடித்துக் கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாகக் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

