தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24) நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தல் கல்வியறிவுக் குழு சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறுதிச்சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
வருங்கால மற்றும் இளம் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படும் தேர்தல் கல்வியறிவுக் குழுக்கள் (ELCs) மூலம் கடந்த நவம்பர் 2 முதல் நவம்பர் 20 வரை கல்வி நிறுவனம், சட்டமன்றத் தொகுதி மற்றும் மாவட்டம் ஆகிய மூன்று நிலைகளில் கட்டுரை மற்றும் வினாடி-வினா போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டது.
இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலா இரு மாணவர்களின் பெயர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதி உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் கல்வியாளர்கள் மற்றும் மொழி நிபுணர் கொண்ட குழு மூலம் போட்டிகள் நடத்தப்பட்டு, சிறந்த 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்ற 60 மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டியும், 60 மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டியும் என மாவட்ட அளவிலான இறுதிச்சுற்று கடந்த நவம்பர் 17-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் "தூய்மையான வாக்காளர் பட்டியலின் முக்கியத்துவம்", "வாக்களிப்பதன் முக்கியத்துவம்" ஆகிய தலைப்புகளில் கட்டுரைப் போட்டியும்; "வாக்காளர் பட்டியல் தயாரிப்பு", "EVM & VVPAT", "வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள்" ஆகிய தலைப்புகளில் வினாடி-வினா போட்டியும் நடத்தப்பட்டன.
இறுதிச்சுற்றில் கட்டுரைப் போட்டியில் 10 மாணவர்களும், வினாடி-வினா போட்டியில் 10 மாணவர்களும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற 20 மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, வட்டாட்சியர் (தேர்தல்) தில்லைபாண்டியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

